ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் மே மாதம் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உமா ஓயா திட்டத்தை ஈரான் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உமா ஓயா திட்டம், ஈரானிய நிறுவனங்களின் பாரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் இரண்டு அணைகளும், 25 கிலோமீட்டர் நீர் செல்லும் சுரங்கப்பாதையும், 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர் மின் நிலையங்களும் அடங்குகின்றன.
இதனுடாக, 5000 ஏக்கர் விவசாய நிலங்களின் நீர் பாசனத்தை மேம்படுத்தவும், 145 மில்லியன் கன மீட்டர் நீரை கொண்டு ஒரு வருடத்தில் 290 GW/h மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
உமா ஓயா திட்டம், ஈரானிய ஒப்பந்ததாரர்களால் வெளிநாடு ஒன்றில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாகும்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம் செய்திருந்ததுடன், ஈரானிய வெளியுறவு அமைச்சரையும் சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பினை, ஈரானின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் ஈரான்-இலங்கை இடையிலான உறவின் திருப்புமுனை என தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.