வங்குரோத்து நாட்டிலும் கூட ஊழல், திருட்டு அதிகரித்துள்ளது. விசா மோசடி மற்றும் தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையாக மாறியுள்ளது. விசா நடைமுறையை மாற்றியமைத்ததில் கொள்முதல் முறை, விலைமனு முறை, போட்டி முறை உருவாக்கப்பட்டதா என்பதில் பிரச்சினை எழுகிறது. வங்குரோத்தான நாட்டில் கூட இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் போர்வையில் விலைமனு கோரல் முறையிலிருந்து விலகி, தேசிய சொத்துக்களும், வளங்களும் சூறையாடப்படும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும். ஊழலைத் தடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும். ஊழலைத் தடுப்பது கட்டளைச் சட்டங்கள் மூலம் மட்டும் மேற்கொள்ளப்படாமல், மேலதிக சுதந்திரத்தை வழங்கி, எளிதில் மாற்ற முடியாத அத்தியாயமாக மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 178 ஆவது கட்டமாக 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கொழும்பு, கெஸ்பேவ, ஆனந்த சமரகோன் வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் வழங்கி வைத்தார்.
டிஜிட்டல் இலங்கையை கட்டியெழுப்புவதாக அரசியல்வாதிகள் கூறுகின்ற போதிலும், டிஜிட்டல் இலங்கையை உருவாக்குவதற்குத் தேவையான விடயங்கள் எமது நாட்டின் கல்வி முறையிலும் கல்விக் கட்டமைப்பிலும் இல்லை என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் முறைமையை மாற்றியமைத்துள்ளதால், கல்வி முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வரும் தரப்பினர் வெறுமனே பேச்சோடு மட்டும் நின்றுவிட முடியாது. விமர்சிப்பது போல, நாட்டுக்காக பாரிய பணியாற்ற வேண்டி வரும். அரசாங்கம் தமக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சியும் நாட்டிற்கான தமது பங்களிப்பை வார்த்தைகளால் மாத்திரமல்லாது செயலாலும் மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.