ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல்வேறு தரப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என நேற்று(21.05) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனுக்காக கடினமான நேரத்தில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க தனது திறமையை நிரூபித்துள்ளார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தனியொரு கட்சியில் போட்டியிட மாட்டார் எனவும், பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.