லங்கா பிரீமியர் லீக் தொடரில், தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை நிறுத்துவதாக/ திரும்பப் பெறுவதாக லங்கா பிரீமியர் லீக் அறிவித்துள்ளது. தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் தலைவருமான பங்களாதேஷை சேர்ந்த தமீம் ரஹ்மான் போட்டி நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினால் அணியின் உரிமையை நிறுத்துவதற்கு/ திரும்பப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
LPL தொடரில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளினால் இன்று(22.05) கைது செய்யப்பட்டிருந்தார். விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்று தொடர்பில் விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாக தமீம் ரஹ்மான் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம்(21.05) நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் அணிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்திலும் இவர் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையை நிறுத்துவதாக/ திரும்பப் பெறுவதாக லங்கா பிரீமியர் லீக் அறிவித்துள்ளது. தமீம் ரஹ்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லை என்றாலும், லங்கா பிரீமியர் லீக்கின் நேர்மை மற்றும் சுமூகமான செயற்பாடு மிகவும் முக்கியமானது என LPL தொடரின் உரிமத்தை பெற்றுள்ள IPG குழுமத்தின் தலைவர் அனில் மோகன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, LPL தொடரில் தம்புள்ளை அணியின் முன்னாள் உரிமையாளரும் Aura Lanka நிறுவனத்தின் தலைவருமான வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவும் நிதி மோசடி குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வர்த்தகர் விரஞ்சித் தம்புகல எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.