நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முதற் பணி..! 

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும் நான்கைந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டியிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடு தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது எனவும், வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவது தொடர்பாக கடன் வழங்கிய நாடுகளுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே  ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பாதுகாப்பு  விசேட ஏற்பாடுகள் சட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு சபையை சட்டபூர்வமாக்குவதற்கும் ஆயுதப்படை குழுவை நியமிப்பதற்கும் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அதற்கான திட்டவட்டமான வேலைத் திட்டம் இல்லாத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பத்தரமுல்ல அக்குரேகொட, பாதுகாப்பு அமைச்சு வீதியில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுதப் படையில் ஈடுபடுபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு போர் தந்திரங்களை கற்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இலங்கை மூலோபாய கற்கைகள் நிறுவகத்தை (Sri Lanka Institute of strategic studies) நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து  முன்னாள் படைவீரர்களின் இல்லத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி, புதிய தலைமையக வளாகத்தை  பார்வையிடவும் இணைந்து கொண்டார்.

இரண்டாவது உலகமாக யுத்தத்தின் போது சேவையில் இருந்து விலகிய மற்றும் ஓய்வு பெற்ற முப்படையினரால் 1944 ஆம் ஆண்டு  இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கத்திற்கு குறைபாடாக காணப்பட்ட தலைமை அலுவலக கட்டிடம் சங்கத்தினதும் இராணுவத்தினதும் நிதிப் பங்களிப்பில்  நிறுவப்பட்டுள்ளது.

இங்கு மேலும்  உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படையினரின்  செயற்பாடுகளுக்காக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களில் பலர் 1983 முதல் 2009 வரை நாட்டின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டனர்.

இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார ரீதியில் நாம் இன்னும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிலையில் இருந்து மீண்டு வரக்கூடிய திறன் எங்களிடம் உள்ளது.

படைவீரர் கிராமங்களில் வாழும் படைவீரர்களுக்கு இன்னும் காணி உரிமை கிடைக்கவில்லை என்பதை அறிந்தேன்.  காணி உறுதி வழங்குவதாக சிலர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இப்பணிகளை நிறைவு செய்து  உறுமய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும்  நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் இந்த ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

மேலும்,  இராணுவத்தில் இருந்து விலகிச் செல்வோர் தொடர்பில்  என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களுக்கு புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும். அந்த வாய்ப்பு இல்லாததால், சிலர் ரஷ்யா செல்ல முடிவு செய்தனர். ஒருவரது திறமைக்கேற்ப, நாட்டிலோ வெளிநாட்டிலோ நல்ல வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை இணைந்து அதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்மொழியுமாறு பணிப்புரை விடுத்துள்ளேன்.

இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் மத்தியில் விசேட திறமைகள் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். படை வீரர்கள் அன்று நாட்டை பாதுகாப்பதன் காரணமாகவே இன்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.

இன்னுமொரு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தான் நாம் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். நாட்டின் ஒற்றுமைக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி, நாட்டின் ஒற்றுமைக்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியது. இந்நிலை நீடித்தால் நமது நாடு பொருளாதாரம் இல்லாத நாடாக அதாவது இன்னொரு லிபியாவாக மாறிவிடும்.

நாட்டைப் பொறுப்பேற்ற பின், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது முதல் பணியாக இருந்தது. அத்துடன் எதிர்வரும் நான்கைந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டியிருந்தது. போரின் போது, ​​“போரை இழுத்தடிப்பது நல்லதல்ல, அதை தந்திரமாக முடிக்க வேண்டும். போரிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதிலும் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

நமது நாடு தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவது தொடர்பாக எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அந்தக் குழுவும் சீனாவும்  எங்களின் முன்மொழிவுகளை ஏற்கத் தயாராக உள்ளன. சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்பிறகு அந்த நாடுகளுடன் தனித்தனி  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மேலும் தனியார் கடன் வழங்குபவர்கள் மற்றும் வங்கிகள், ஓய்வூதிய நிதியம் இவை அனைத்துடனும்  பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் எங்களிடம் இருப்பதால் எங்களுக்கு தொடர்ந்து செல்ல முடியும். ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த நாட்டிற்கு வந்ததன் பின்னர் அது குறித்து கலந்துரையாடுவோம். பின்னர் இந்த திட்டம் 2025 வரவு செலவுத் திட்டத்துடன் நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் நடத்தப்பட இருப்பதால் ஜனவரி அல்லது பிப்ரவரியில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளினால் ஏற்படும் பொருளாதார அபிவிருத்தி மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இதற்காக பொறுமையாக உழைத்த ஓய்வு பெற்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன்  முன்னாள் படைவீரர்கள் குழுவுக்கும்  நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல். விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் இலங்கை  முன்னாள் படைவீரர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அங்கவீனமுற்ற படைவீரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply