நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 8,944 குடும்பங்களைச் சேர்ந்த 33,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று(23.05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரற்ற வானிலையால் இதுவரையில் 973 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின் படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவு நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனபடி, மேல் மாகாணத்தில் 4,814 குடும்பங்களைச் சேர்ந்த 19,527 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் கம்பஹா மாவட்டத்திலேயே 17,073 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 3,503 குடும்பங்களைச் சேர்ந்த 12,150 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சீரற்ற வானிலையால் இதுவரையில் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.