மன்னார் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள சுமந்திரன் 

மன்னார் தீவு மக்கள் இரு பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதால் இவற்றிற்கு சட்ட ரீதியாக திர்வு காண்பதற்கு மன்னார் சமூக செயற்பாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகளை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். 

மன்னாரில் கடந்த 23ம் திகதி இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

“இன்று நான் மன்னாருக்கு வருகை தந்து மன்னார் மாவட்டத்திலுள்ள பல அமைப்புக்களை சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பல வருடங்களாக மன்னார் மக்கள் நலன் கருதி செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

விசேடமாக இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மன்னார் தீவு மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதில் ஒன்று மின்சார காற்றாலை அமைக்கப்படும் செயற் திட்டம். இதில் மூன்று திட்டங்கள் உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று ஏற்கனவே காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு திட்டங்கள் காற்றாலைகள் அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் ஏற்கனவே செயற்படுத்தப்பட்ட காற்றாலையை அடிப்படையாக வைத்து இதனை தொடர்ந்து அமைப்பதன் மூலம் இந்த பிரதேசத்துக்கு ஏற்பட்டுள்ள பலவிதமான பாதிப்புக்களை மக்கள் ஏற்கனவே நேரடியாகவே அனுபவித்து வருகின்றனர். மீன்பிடி சமூகத்தினால் வழமையாக பிடிக்கப்படுகின்ற மீன் வகைகள் மிகவும் குறைந்து செல்லுகின்றன.

கடல் நீரோட்ட திசைகளும் மாற்றமடைந்து வருகின்றது. இப்படியான காரணங்களால் இங்கு பிடிக்கப்படும் மீன்களின் தொகை பாரிய வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதிலும் குறிப்பாக மன்னாரில் பழமைவாய்ந்த கரவலைத் தொழில் மீன்பிடியிலும் பாரிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆகவே இவற்றை வைத்தும் வேறு பல விடயங்களையும் அவதானித்தும் காற்றாலையை மன்னார் தீவில் அமைப்பது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது. காற்றாலை மின்சாரத்தை அமைப்பதில் தவறு இல்லை. ஆனால் அவற்றினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உகந்த இடங்களை தெரிவு செய்து செயற்படுத்தப்பட வேண்டும்.

மன்னார் தீவு என்பது கடல் மட்டத்திலிருந்து சற்று குறைவான இடத்திலேயே காணப்படுகின்றது. காற்றாலை இங்கு அமைப்பது ஒரு பொருத்தமற்ற இடமாகும் என்பது இங்குள்ள மக்களின் நிலைப்பாடாகும். இவற்றை சரியான முறையில் ஆராய்ச்சி செய்து திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. 

ஆகவே முன்னெடுக்கப்பட இருக்கும் காற்றாலை திட்டங்களை நிறுத்துவதற்கும் ஏற்கனவே ஏற்பட்டுள்ள விளைவுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் சில மாற்று வழிகள் செய்யப்பட வேண்டும் என்பதும் மக்கள் தெரிவித்துள்ளனர் ஆகவே இந்த விடயம் தொடர்பில் நாங்கள் உடனடியாக கவனத்துக்கு எடுத்துள்ளோம். ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இவ்வாறு மன்னாரிலிருந்தும் மன்னார் மக்கள் சார்பாகவும் இவ்வாறான ஒரு செயற் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அல்லது அவர்களுடன் இணைந்து கொள்வதற்கு வருகின்ற வாரங்களில் செயற்பட இருக்கின்றோம்” என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply