தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தோல்விகளுக்கு இலங்கை கிரிக்கெட் (SLC) அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திறமையானவர்கள் எனவும், வீரர்கள் மீது குற்றம் சுமத்த மாட்டேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முறையாக நடத்தப்பட்டால் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வது இயலாத செயற்பாடு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தான் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, விளையாட்டு அமைப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு உடனடியாக செயற்பட்டிருந்தால் உலகக் கிண்ணத்தில் இலங்கை இவ்வாறான மோசமான நிலையை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை சீர் செய்வதற்கு புதிய விளையாட்டு தொடர்பான சட்டத்தின் அவசியத்தையும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.