எதிர்வரும் பொசன் பண்டிகையை முன்னிட்டு, நடைபெறவுள்ள சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
12,050 பௌத்த விகாரைகளுள் 11,095 பௌத்த விகாரைகளில் பொசன் போயாவை முன்னிட்டு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் 322 பொசன் வலயங்களும், 296 பொசன் பந்தல்களும், 4,557 பொசன் தன்சல்களும், 5,929 பொசன் விழாக்களும் நடைபெறவுள்ளதாகவும், இவற்றுள் பெரும்பாலான நிகழ்வுகள் மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளன.
19,062 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 370 விசேட அதிரடிப்படையினர், 607 முப்படையினர் மற்றும் 26,013 சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.