மீண்டும் அமைச்சரவை மாற்றம்? 

எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

இதற்கான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த அமைச்சரவை மாற்றும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயார்படுத்தும் நோக்கில் ஆளும் கட்சியை வலுப்படுத்துவதற்காக இத்தகைய செயற்பாடு முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன நிகழ்வொன்றின் போது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான சரத் பொன்சேகாவும், அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில், சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் அவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்பில் நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்கும் நிகழ்வு இந்த வார இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது 

Social Share

Leave a Reply