டி20 உலகக் கிண்ணத் தொடர் வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொண்டது. இதன் காரணமாக அவுஸ்ரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
மேற்கிந்திய தீவுகள், சென்ட் வின்சென்டில் இன்று(25.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ் 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
Net Run Rate புள்ளிகளுக்கமைய அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுக்கொள்வதற்கு 12.1 ஓவர்களில் வெற்றியிலக்கை கடக்க வேண்டிய நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 11.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு 114 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும் பங்களாதேஷ் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ரஷித் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன்படி, ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் 8 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் தெரிவு செய்யப்பட்டார். சூப்பர் 8 சுற்றில் முதலாவது குழாமில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி பங்குபற்றிய 3 போட்டிகளில் 2இல் வெற்றியீட்டி தரவரிசையில் 2ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்நிலையில், ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியுள்ள அவுஸ்ரேலியா அணி தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விடைந்தமையே அவுஸ்ரேலியாவின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை பங்குபற்றிய ஒரு போட்டியிலும் தோல்வியை எதிர்கொள்ளாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும், 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அரையிறுதி போட்டிகள் எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன.