இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் சூரிய மின் உற்பத்தியினுடாக 132 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்திற்குள் சூரிய மின் உற்பத்தி மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தியினை இலங்கை எட்டியுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரைகளினுடாக மேற்கொள்ளப்படும் சூரிய மின் உற்பத்தியிலிருந்து 944 மெகாவாட் மின்சாரமும், நிலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் கலங்களினுடாக 156 மெகாவாட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் கூரைகளினுடாக மேற்கொள்ளப்படும் சூரிய மின் உற்பத்தியிலிருந்து 1000 மெகாவாட் மின்சார உற்பத்தியை எட்டவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 4 வருடங்களுக்கு, வருடந்தோறும் மேலதிகமாக 150 மெகாவாட் மினசாரத்தை கூரைகளினுடாக மேற்கொள்ளப்படும் சூரிய மின் உற்பத்தியினுடாக அதிகரிப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
