ஜனாதிபதி தேர்தலுக்கு மற்றொரு வேட்பாளரும் தயார் நிலையில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக இலங்கையின் முன்னணி வர்த்தகங்களில் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், நாட்டின் மிகப்பெரிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். 

கட்சியின் தீர்மானத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்த தம்மிக்க பெரேரா, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான பணிகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வார்கள் என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொருளாதார கொள்கைகளை தயாரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிப்பதற்கு 60 நாட்கள் போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தன்னுடைய டிபி கல்வித் திட்டத்தினூடாக(DP Education) ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.   

டிபி கல்வித் திட்டத்தினூடாக நாட்டிலுள்ள 10,000 பாடசாலைகளுக்கும் சமனான கல்வியை வழங்குவதற்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மாத்திரம் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையை முன்னேற்றுவதற்கான தன்னுடைய பொருளாதார கொள்கைகளின் காரணமாக, மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் முன்னணி வர்த்தகங்களில் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

Social Share

Leave a Reply