பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தயாசிறி ஜயசேகரவை கொழும்பு, டாலி வீதியிலுள்ள சுதந்திர கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில், அவர் கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக இன்று(05.07) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் முக்கியஸ்தர்களினால், செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த 2ம் திகதி, கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.
மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியில் முக்கியஸ்தர்களுக்கு எதிராக தயாசிறி ஜயசேகர மனுவொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டது.
இதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் கட்சியின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.