யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியால் வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கான சுகாதார அமைச்சின் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன நேற்று இரவு குறித்த கடிதத்தைப் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு வழங்க முற்பட்டுள்ளார்.
அதனைக் குறித்த வைத்திய அத்தியட்சகர் ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியசாலையில் தான் மட்டுமே கடமையில் நிற்கும் சமயத்தில் தன்னை கைது செய்து அந்த சமயத்தில் வைத்தியசாலையில் ஏதேனும், உயிரிழப்பு ஏற்பட்டால் தாமே பொறுப்பு என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன போராட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.