நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரின் இறுதிப் போட்டி ஆரம்பம்

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், 700 டெஸ்ட் விக்கெட்டுக்களை கடந்த ஜாம்பவான்களில் ஒருவருமான ஜேம்ஸ்(ஜிம்மி) அண்டர்சன் இங்கிலாந்து அணி சார்பில் பங்கேற்கும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று(10.07) ஆரம்பமாகியது. 

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று(10.07) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 41.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் மிகைல் லூயிஸ் 27(58) ஓட்டங்களையும், கவேம் ஹாட்ஜ் 24(48) ஓட்டங்களையும், அலிக் ஏதனேஸ் 23(56) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அண்டர்சன், கிரிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். தன்னுடைய இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஜேம்ஸ் அண்டர்சன் பெற்றுக்கொண்ட 701 டெஸ்ட் விக்கெட் இதுவாகும். 

பின்னர், முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இங்கிலாந்து அணி சார்பில் சாக் கிராலி 76(89) ஓட்டங்களையும், ஒலி போப் 57(74) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 68 ஓட்டங்களினால் முன்னிலையிலுள்ளது. ஜோ ரூட் 15(39) ஓட்டங்களுடனும், ஹாரி புரூக் 25(29) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(11.07) இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply