போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் ரயில் பாதைக்கு மேல் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11.07) திறந்து வைத்தார்.
நாளாந்தம் 109 ரயில் பயணங்களுக்கு ரயில் கடவை மூடப்படுவதால் ஏற்படும் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் மாகா பொறியியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட வர்த்தக நகரப் பகுதியான கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள ரயில் கடவையால் நாளாந்தம் சுமார் 03 மணித்தியால நேரவிரயம் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மேம்பாலத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் கொம்பனித்தெருவில் இருந்து காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் நோக்கி போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க முடியும். மேலும், வாகன நெரிசல் காரணமாக வீதியில் வீணாகும் மக்களின் நேரத்தை தேசிய பொருளாதாரத்தில் இணைக்க முடியும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.