லங்கா பிரீமியர் லீக் தொடரில் அடுத்த சுற்றுக்குள் நுழைவதற்கு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தகுதி பெற்றுக்கொண்டது. கோல் மார்வல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக கொழும்பு அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
கொழும்பில், இன்று(15.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. காலி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.
சதீஷ ராஜபக்ஷவும் 15(17) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ஜோடி சேர்ந்த ரிம் ஷெய்பேர்ட், பானுக்க ராஜபக்ஷ இருவரும் இணைப்பட்டமாக 41 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலு சேர்த்தனர். பானுக்க ராஜபக்ஷ 35(15) ஓட்டங்களுக்கும், ரிம் ஷெய்பேர்ட் 44(38) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் களத்திற்கு வந்த காலி வீரர்கள், கொழும்பு அணியின் பந்து வீச்சாளர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க காலி அணி 19.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
கொழும்பு அணி சார்பில் பந்தவீச்சில் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுக்களையும், டுனித் வெல்லாலஹே, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
139 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரஹ்மானுள்ளா குர்பாஸ் 23(17) ஓட்டங்களுடனும், அஞ்சலோ பெரேரா 11(6) ஆட்டமிழக்க, ஜோடி சேர்ந்த முஹமட் வசீம், க்ளன் பிலிப்ஸ் இருவரும் அணியை வெற்றியைிலக்கை நோக்கி கொண்டு சென்றனர். முஹமட் வசீம் 50(44) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இறுதிவரை களத்திலிருந்த க்ளன் பிலிப்ஸ் 31(32) ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 15(12) ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, கொழும்பு அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. காலி அணி சார்பில் பந்துவீச்சில் இசுரு உதான, மஹீஸ் தீக்ஷண, ஷஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இதன்படி, கொழும்பு அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், லங்கா பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக கொழும்பு அணியின் மதீஷ பத்திரன தெரிவு செய்யப்பட்டார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சுற்றுக்கு கொழும்பு அணி உட்பட தரவரிசையில் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ள காலி, யாழ்ப்பாணம் ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன. மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய இரு அணிகளுக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.