சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 19ம் திகதி முதல் 22ம் திகதி வரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஆசிய வலயத்திலுள்ள நாடொன்றில் இந்த மாநாடு நடத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென ஶ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் 108 உறுப்பினர்கள் உள்ளிட்ட 220 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசிய கிழக்கு, ஆசிய பசுபிக் வலயம், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
உலகின் பல நாடுகளிலுள்ள கிரிக்கெட் நிர்வாகிகள், பங்குதாரர்களின் முதன்மையான மாநாடாக கருதப்படும் இந்த மாநாட்டின் போது விளையாட்டின் மூலோபாய நோக்கம், நிர்வாகம், கிரிக்கெட்டின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
ஒலிம்பிக் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.