பாழடைந்து கிடக்கும் நீர்பாசன கட்டமைப்புகளை மறுசீரமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சமீபகாலத்தில் இதுபோன்று திட்டமென்று முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டில் ஒரு பகுதிக்கு வெள்ளம் வந்தால், மறு பகுதி மழைநீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலை காணப்படுகிறது. தேசிய அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அரசியல்வாதிகளின் பக்கெட்டை நிரப்பும் பேராசை மிக்க திட்டங்களாக மாறிவிட்டன. இந்த முறைமை மாற வேண்டும். வங்குரோத்து நாட்டில் கூட நாம் இத்தகைய போக்குகளை விட்டு மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 331 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன பொலன்னறுவை, மெதிரிகிரிய, கொஹொம்பதபன கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (17.07) இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நடனக்குழுவிற்கு ஆடைகளை கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
வங்குரோத்து நாட்டில் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இவை அனைத்தும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயமும் ஸ்மார்ட்டாக முன்னெடுக்கப்பட வேண்டும். பழமைவாத முறைகளைக் காட்டிலும் நவீன முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த நிலப்பரப்பில் அதிக அறுவடைகள் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். இதற்காக, தரமான உள்ளீடுகளை மலிவு விலையில் வழங்கவும், விவசாய உற்பத்தியை மிக உயர் நிலைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது நாட்டின் விவசாய உற்ப்பத்திகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பக்கூடிய கட்டமைப்பை நாம் உருவாக்கித் தருவோம். தற்போது தமது உற்ப்பத்திகளை விற்க முடியாமல் விவசாயிகள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையான விலை இல்லாமல், சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த முறையில் மாற்றத்தை கொண்டு வந்து, தெளிவான விவசாய திட்டத்தை நாடு கொண்டிருக்க வேண்டும். தேசிய விவசாயத் திட்டமொன்று அத்தியவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.