ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சித் தலைவர் நடாத்திய கலந்துரையாடல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியை அறிவிக்கும் என சுட்டிக்காட்டிய மயந்த திஸாநாயக்க சந்திப்பின் உண்மைத் தன்மை எதிர்வரும் நாட்களில் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் ஒரே அமைச்சரவையை சேர்ந்த இருவர் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.