தாய்லாந்து, பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கிடையிலான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்ளை இழந்து 96 ஓட்டங்களை பெற்றது. இதில் நட்டயா பூச்சதாம் 40 ஓட்டங்களையும், சுலீபோர்ன் லயோமி 17 ஓட்டங்களையும், ரொஸெனன் கனோ 13 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரபேயா கான் 4 விக்கெட்களையும், சபிகுன் நேகர் ஜஸ்மின், ரித்து மோனி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. இதில் முர்ஷிதா ஹோட்டுன் 50 ஓட்டங்களையும், டிலார அக்டேர் 17 ஓட்டங்களையும், இஷ்மா தஞ்சிம் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்த பங்களாதேஷ் அணி முதல் வெற்றியைப் பெற்றுகொண்டது. மாலைதீவுகள் அணியினை வெற்றிகொண்ட தாய்லாந்து அணி இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த குழுவிலிருந்து எந்தவொரு அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை இன்னமும் பெறவில்லை. வெளியேறவுமில்லை.