ஆசிய கிண்ண இறுதியில் இலங்கை மகளிர்

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற விறு விறுப்பான போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்தது 140 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 61 ஓட்டங்களை வழங்கிய நிலையில் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பாகிஸ்தான் அணி நகர்ந்தது. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டங்களை பெற பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் தமது இன்னிங்ஸை நிறைவு செய்தது. இலங்கையின் களத்தடுப்பு மோசமாக அமைந்தமையும் பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்த இயலாமல் போனது. ஐந்து பிடிகளை இலங்கை களத்தடுப்பாளர்கள் தவறவிட்டிருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முனீபா அலி 37 ஓட்டங்களையும், குல் பெரோஷா 25 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள். நிடா தார் 23 ஓட்டங்களையும், பட்டிமா சனா ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும், அலியாஸ் ரிஷா ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் தனது நூறாவது 20-20 போட்டியில் விளையாடிய உதேஷிகா பிரபோதினி 2 விக்கெட்களையும், கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி இரண்டாவது பந்தில் விஷ்மி குணரட்னவின் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த ஹர்சிதா விக்ரமரட்ன 12 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு தடுமாற்றம் ஆரம்பித்தது. இருப்பினும் தலைவி சாமரி அத்தப்பத்துவுடன் இணைந்த கவிஷா டில்ஹாரி சிறப்பாக துடுப்பாட இலங்கை அணி மீண்டு வெற்றி பெறும் நிலையை பெற்றது. கவிஷா டில்ஹாரி 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க 59 ஓட்ட இணைப்பட்டம் முறியடிக்கப்பட்டது. நிலக்ஷி சில்வா இரண்டு பந்துகளில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அனுஷ்கா சஞ்சீவனி வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க வெற்றி இலக்கை நோக்கி நகர இலகுவானது. இறுதி வரை போராடிய சாமரி அத்தப்பத்து 63(48) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அனுஷ்கா சஞ்சீவனி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். கடைசி நேரத்தில் சுகந்திகா குமாரி 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சாதியா இஃபால் 4 விக்கெட்ளை கைப்பற்றி இலங்கை அணிக்கு சிக்கலை வழங்கினார்.

Social Share

Leave a Reply