பிரான்ஸ், பாரிஸில் கடந்த 26ம் திகதி நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா சிலர் மன வருத்தம் அடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது என ஒலிம்பிக் தொடக்க விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், எந்தவொரு மதக் குழுவையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை என ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர்.
பிரான்ஸ், கலை இயக்குநர் தோமஸ் ஜாலியின் இயக்கத்தில் ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது அரங்கேற்றப்பட்ட சில நிகழ்வுகளில் கிறிஸ்தவ மதத்தை கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக பிரான்ஸ் ஆயர் மற்றும் சில கத்தோலிக்க குழுவினர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
இயேசு தனது சீடர்களுடனான இறுதி இராப்போசன விருந்தை சித்தரிக்கும் வகையில் சில கலைஞர்களின் பங்கேற்பில் அரங்கேற்றப்பட்ட காட்சிகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. குறித்த காட்சிகளினால் எவரேனும் மன வருத்தம் அடைந்திருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மாறுப்பட்ட பாலினங்கள் மற்றும் பாலியல் அடையாளங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் குறித்த காட்சியில், நிர்வாண நிலையில் சில கலைஞர்கள் தோன்றியிருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இருப்பினும், ஒலிம்பிக் தொடக்க விழா தொடர்பில் பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் சாதகமான கருத்துக்களை கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஒலிம்பிக் தொடக்க விழாவில் தென் கொரியா வீரர்கள் தவறாக அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு சர்வதேச ஒலிம்பிக் நிர்வாக குழு மன்னிப்பு கோரியுள்ளது.
தொடக்க விழாவின் நாடுகளின் அணிவகுப்பில் தென் கொரியா வீரர்களை அறிமுகப்படுத்துவதற்கு போது வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியா குழாம், வட கொரியா என அறிமுகப்பட்டமைக்காக தென் கொரியா விளையாட்டுத்துறை அமைச்சு வருத்தங்களை வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பிலும் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் நிர்வாக குழு மன்னிப்பு கோரியுள்ளது.