உலகளாவிய ரீதியில் இன்று (12.08) சர்வதேச யானைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
யானைகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமான முறையில் யானைகளை வேட்டையாடுதலை தடுக்கவும் இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் “யானைகளை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சிவசங்கர் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பாடசாலையின் அனைத்து வகுப்பு மாணவர்களும் யானைபோல் வேடம் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் உலக யானை தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் M.சசிகரன்,
சுற்றுச்சூழல் அதிகார சபையின் உத்தியோகத்தர் எஸ்.லதீஸ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.