பொருளாதார சுதந்திர பணியில் இணையுமாறு அழைப்பு

பொருளாதார சுதந்திர பணியில் இணையுமாறு அழைப்பு

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு தன்னிடம் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய தொழில் வல்லுநர்கள் பேரவையை கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நேற்று (20.08) ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டான இலங்கையின் பொருளாதார மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் எதிர்காலவாதிகளின் கருத்தாய்வு மாநாட்டில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மனிதாபிமான முதலாளித்துவத்தையும், சமூக ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின் ஊடாக நமது நாட்டை செழிப்பான நாடாகவும், துரித பொருளாதார அபிவிருத்தியுடைய நாடாகவும் மாற்றி, அதன் பிரதிபலனின் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பகிர்ந்தளிக்கும் பொருளாதார கட்டமைப்பிற்கு இந்தக் குழுவோடு செல்ல முடியும்.

இந்த புதிய சிந்தனை சமமான வழிமுறையை பின்பற்றி நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுகின்ற புதிய பாதைக்கு இட்டுச் செல்லும். இதில் ஊழல் மோசடிக்கு எந்த ஒரு இடமும் இல்லை. கொள்முதல் முறைகளையும் மோசடியான அரச கொடுக்கல் வாங்கல் முறைகளையும் தவிர்த்து, ஊழலை அடியோடு இல்லாத செய்யும் பொருளாதார சுதந்திரத்தை வெற்றி கொள்ளும் பணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் .

எமது நாட்டின் எதிர்கால பொருளாதார வழிமுறைகள் பற்றிய சிநேகபூர்வ கலந்துரையாடல் மற்றும் கருத்தாடல்களில் ஈடுபட்ட எமது நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் வணிகத்துறையினருக்கு நன்றி” என்றார்.

இந்த கருத்தாய்வு மாநாட்டில் கலாநிதி மான்டேக் சிங் (Economic architect of india’s liberalization policy),
டி.கிருஷ்ணகுமார் (CEO of reliance consumer product limited), வெரிட்டி ஆய்வகத்தின் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், எரான் விக்கிரமரத்ன, சுஜீவ சேனசிங்க, ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரைகளையும் நோக்குகளையும் முன்வைத்தனர்.

Social Share

Leave a Reply