
புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நாளை இடம்பெறவுள்ள விசேட மாநாட்டில் சஜித் அணியிலுள்ள மேலும் பலர் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதாக வெளியான தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் மறுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (24.08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை மறுத்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சஜித் அணியிலுள்ள மேலும் பலர் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பில்
கூறப்பட்டாலும் அவ்வாறு இணைந்துக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் இல்லை.
அவ்வாறு எவரேனும் இணைந்துக்கொண்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதேவேளை, ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரமாண்டமான முறையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அதற்கான அங்கீகாரமும் இந்த மாநாட்டில் வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டள்ளது.