இங்கிலாந்துடனான புதிய ஒப்பந்தத்தில் மக்கலம்

இங்கிலாந்துடனான புதிய ஒப்பந்தத்தில் மக்கலம்

இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால், இங்கிலாந்து அந்த அணியின் ஒரு நாள் சர்வதேச போட்டி அணி மற்றும் T20 சர்வதேச அணிகளுக்கான முழுநேர தலைமை பயிற்றுவிப்பாளராக பிரண்டன் மக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி முதல் அவர் மூன்று வித கிரிக்கெட்டுக்குமான பயிற்றுவிப்பாளாராக பொறுப்பேற்கவுள்ளார். 2027 ஆம் ஆண்டு வரை அவருக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

நியுஸிலாந்து அணியின் முன்னாள் தலைவரான மக்கலம், ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இதுவரையில் T20 சர்வதேச அணிக்கான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய அவுஸ்த்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ மோட், கடந்த T20 சர்வதேச உலக கிண்ண தொடருக்கு பிறகு தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

42 வயதான மக்கலம், டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்றதிலிருந்து டெஸ்ட் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியை வலுவான நிலையில் மேம்படுத்தி வருகிறார்.

இந்த புதிய சவாலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், மேலும் ஏற்கனவே உள்ள வலுவான அடித்தளத்தை உருவாக்கி ஒருநாள் மற்றும் T20 சர்வதேச அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் மற்றும் அவரின் அணியுடன் இனைந்து பயிற்றுவிப்பாளராக பணியாற்ற ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக மக்கலம் நம்பிக்கை வெளியிட்டார்.

மக்கலம்பொறுப்பேற்கும் வரை மார்கஸ் ட்ரெஸ்கோதிக் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் எதிர்வரும் தொடருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு முன்னர் நடைபெறவிருக்கும் இந்திய அணிக்கெதிரான தொடருடன் மக்கலம் இங்கிலாந்து அணிக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளின் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்வுள்ளார்.

Social Share

Leave a Reply