
ரணில் விக்ரமசிங்க ஏனைய வேட்பாளர்களை போன்று செயற்படமால், நடைமுறைக்கு சாத்தியமான வெளிப்படைத்தன்மை கொண்ட வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(04.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளின் பெர்ணான்டோ,
“அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் யோசனைகளை முன்வைக்கின்றனர். தங்களுடைய வரி மற்றும் அரச வருமானங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியே இத்தகைய கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு எவ்வாறு அதிக சம்பளத்தை வழங்க முடியும் என்பதை யாரும் தங்களுடைய வேலைத்திட்டங்களில் முன்வைக்கவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைமுறைப்படுத்திய திட்டங்களையே தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவுள்ளார்.
சலுகைகள் தொடர்பில் உரையாற்றுபவர்கள் வருமானம் தொடர்பில் கூறுவதில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை கொண்ட திட்டங்களாகும்.
நாம் வெறொரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், மீண்டும் சிலிண்டர்களை தோளில் சுமந்துகொண்டு, எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டு, பாடசாலைகள் மூடப்பட்டு, வைத்தியசாலைகளில் மருந்துகள் இன்றி மரணங்கள் ஏற்படும் நிலையே உருவாகும்” என தெரிவித்துள்ளார்.