
கணக்கெடுப்புக்களினூடாக சஜித்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் ஒன்றிணையவுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க பொய்யான கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார்,
“பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவது இலகுவான விடயமல்ல. அதற்குத் தேவையான சரியான வேலைத்திட்டம், முன்னாயத்தங்கள் மற்றும் திறமையான குழு என்பன தேவை.
ஐக்கிய மக்கள் சக்தியிடம் இதற்கான வேலைத்திட்டம், முன்னாயத்தம் மற்றும் திறமையான குழு என்பன காணப்படுகின்றது. இதனை எந்தவொரு நபரினாலும் இலகுவாக புரிந்துகொள்ள இயலும்.
ரணிலும் சஜித்தும் இணையவுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். தற்பொழுது அனைத்து கணக்கெடுப்புக்களிலும் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலைத்திட்டங்களுக்காக அன்றி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு யாருடனும் இணையப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.