மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 51 ஆவது மக்கள் வெற்றி பேரணி சஜித் பிரேமதாச தலைமையில் ஹபராதுவ நகரில் நேற்று (14.09)
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்கவும் மேலும் சிலரும் கூறிக்கொண்டு திரிகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை. இன்று மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான பல வெகுஜன அமைப்புகளின் கூட்டத்திற்கு இடை நடுவில் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தடிகள் பொல்லுகளால் தாக்கியிருக்கின்றார்கள்.
ரணிலும் அநுரவும் சேர்ந்து மேற்கொள்கின்ற பொறிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க நாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக அன்றி அநுரகுமார திசாநாயக்கவை கையில் தாங்கிக் கொள்வதற்காகவே செயற்பட்டு வருகிறார். அவர் அநுரவின் சப்போர்ட்டராக இருக்கின்றார்.
வரியை குறைப்போம் என்று கூறுகின்ற ரணிலினால் 10 இலட்சம் பேர் இருளில்
வரியை குறைப்போம் என்று கூறி சலுகை வழங்குகின்ற ஜனாதிபதி இன்று 10 இலட்சம் பேரின் மின்சாரத்தை துண்டித்து இருக்கின்றார். இலட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மூடப்பட்டு இளம் தலைமுறையினரின் தொழில் வாய்ப்பு இல்லாது போயிருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம் பொருளாதாரம் சுருக்கப்பட்டமையாகும். பொருளாதாரத்தை விரிவாக்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை திட்டத்தில் உள்ள விடயம்.
வங்குரோத்தடைந்த எமது நாட்டுக்கு கொலை கலாச்சாரம் வேண்டாம்
இந்த நாட்டுக்கு கொலை கலாச்சாரமும் அச்சுறுத்தலும் தீவிரவாதமும் தேவையில்லை. ஒழுக்க விழுமியத்துடன் கூடிய ஒரு சமூகமே இந்த நாட்டுக்கு தேவை. அனைவருக்கும் சுபீட்சம் கிடைக்கின்ற நாடொன்று வேண்டும். அந்த நாட்டுக்கான அடித்தளம் இடப்பட வேண்டும்.
நாடு வங்கரோத்தடைந்து முழு நாட்டு மக்களும் அழுத்தங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் குறுகிய காலத்துக்குள் எமது நாட்டை கட்டியெழுப்புவோம் என உறுதியளிக்கின்றோம்.