கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 4 வீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான பல வீதிகள் யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கஜன் இராமநாதன் கீழ்வரும் வீதிகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்:
- யாழ்ப்பாணம் – பலாலி வீதி (கிழக்கு பக்கம்): வயாவிளான் மத்திய கல்லூரிக்கு அடுத்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள வீதி இராணுவ கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இந்த வீதி பருத்தித்துறை பொன்னாலை வீதியுடன் இணைவதுடன் உள்ளூர் போக்குவரத்திற்கு இன்றியமையாததாகும்.
- அச்சுவேலி வயாவிளான் – தோளக்கட்டி வீதி: இந்த முக்கிய வீதி மூடப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள முக்கியமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளது.
- வயாவிளான் யாழ் விமான நிலைய ஓடுபாதை பக்க வீதி: கட்டுவன் சந்தி ஊடாக இந்த வீதியைத் திறப்பதன் மூலம் யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான தொடர்பைக் கணிசமாக மேம்படுத்த முடியும்.
- காங்கேசன்துறை – கீரிமலை வீதி (ஜனாதிபதி அரண்மனை வீதி): வரலாற்று மற்றும் கலாச்சார தளத்திற்கு இட்டுச் செல்லும் இந்த வீதி மீண்டும் திறக்கப்படுவதால், உள்ளூர் சமூகங்கள் பயனடைவதுடன், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும்.
இந்த வீதிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதால் நல்லிணக்கம் மற்றும் பிரதேச வளர்ச்சி ஆகியன வலுவடைவதுடன், எமது மக்களின் நீண்ட கால கவலையை நிவர்த்தி செய்து, அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும் நிரூபிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்வீதிகளை மீளத் திறப்பதால் யாழ்ப்பாண மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதோடு எமது தேசத்தின் அமைதியான வளமான எதிர்காலத்துக்கும் உறுதுணையாக அமையும் என்பதால், இந்த வேண்டுகோளுக்குத் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.