155வது காந்தி ஜெயந்தியினை நினைவுகூரும் முகமாக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு இன்று(02.10) மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அந்நிகழ்வுகளைத் தொடர்ந்து உயர்ஸ்தானிகர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பொன்றினையும் மேற்கொண்டிருந்ததாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி அவர்களது 150வது பிறந்த தின நினைவினை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டில் இந்த மார்பளவுச் சிலையானது இந்தியாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி அவர்கள் தியான நிலையில் இருக்கும் இந்த 42 அங்குல வெண்கலச் சிலையானது பத்மபூசண் விருது பெற்ற ராம் வஞ்ஜி சுதரினால் வடிவமைக்கப்பட்டதாகும். குஜராத்தின் கேவாடியாவில் உள்ள உலகின் மிகவும் உயரமான வெண்கலச் சிலையான சர்தார் பட்டேல் சிலையும் சுதரினால் வடிவமைக்கப்பட்டதாகும்.
காந்தி ஜெயந்தியினை நினைவுகூரும் முகமாக இன்று மாலை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாச்சார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்தின் ஒத்துழைப்புடன், இலங்கை இந்தியச் சங்கத்தால் மகாத்மா காந்தி நினைவுப் பேருரை ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்நினைவுப் பேருரையானது இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் திரு. ஒஸ்டின் பெர்னாண்டோவினால் நிகழ்த்தப்படும். இலங்கை இந்தியச் சங்கத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இந்நிகழ்வானது மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் இன்றைய உலகிற்கான அவற்றின் பொருத்தப்பாடு குறித்துப் பிரதிபலிப்பதற்கான ஒரு தளமாக அமைகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.