பிரவீன் ஜெயவிக்ரமவிற்கு கிரிக்கெட்டில் ஈடுபடத் தடை

பிரவீன் ஜெயவிக்ரமவிற்கு கிரிக்கெட்டில் ஈடுபடத் தடை

இலங்கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரம ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியமைக்காக ஐசிசியினால் ஒரு வருட கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால், விதிக்கப்பட்ட தடையில் 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரவீன் ஜெயவிக்ரம மீது பின்வரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன:

பிரிவு 2.4.4 – சர்வதேசப் போட்டிகளில் போட்டி நிர்ணயம் செய்வதற்கு அவரை அணுகியமை தொடர்பில் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக அறிவிக்காமல் தாமதப்படுத்தியமை.

பிரிவு 2.4.4 – 2021ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் போட்டி நிர்ணயம் செய்வதற்கு மற்றுமொரு வீரரை அணுகுமாறு கிடைக்கப்பெற்ற அழைப்பு தொடர்பில் தாமதமின்றி ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கத் தவறியமை.

பிரிவு 2.4.7 – விசாரணைகளைத் தடுக்கும் நோக்கில், ஊழலில் ஈடுபடுவதற்கான அழைப்புக்கள் தொடர்பான குறுஞ்செய்திகளை நீக்கியமை.

சர்வதேச போட்டிகள் மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்குச் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் ஆகியன ஒப்புக் கொண்டிருந்தன.

கடந்த ஒகஸ்ட் மாதம் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதிலிருந்து, 14 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு பிரவீன் ஜெயவிக்ரமவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

பிரவீன் ஜெயவிக்ரம குற்றத்தை ஒப்புக் கொண்டமைக்கு அமைய, அவருக்கான தண்டனையைச் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply