நடப்பு சாம்பியன்களிடம் வீழ்ந்தது இலங்கை

நடப்பு சாம்பியன்களிடம் வீழ்ந்தது இலங்கை

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று(05.10) நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இலங்கை சார்பில் நிலக்‌ஷி சில்வா 29(40) ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 23(35) ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அவுஸ்ரேலியா சார்பில் பந்து வீச்சில் மேகன் ஷட் 3 விக்கெட்டுக்களையும், சோபி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

94 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா மகளிர் அணி, 14.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. அவுஸ்ரேலியா சார்பில் பெத் மூனி ஆட்டமிழக்காமல் 43(38) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.  

இதன்படி, அவுஸ்ரேலியா மகளிர் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், அவுஸ்ரேலியாவின் மேகன் ஷட் ஆட்ட நாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்திருந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இதுவரையில் பங்கேற்ற இரண்டு போட்டிகளும் தோல்வியடைந்துள்ளது.

Social Share

Leave a Reply