நாட்டின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும் – சிவராஜா துமிலன்

நாட்டின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும் - சிவராஜா துமிலன்

நாட்டிலுள்ள காலாவதியான கொள்கைகள் மாற்றம் பெறும் போதே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல இயலும் என ப்ளூ ஒசியன்( Blue Ocean) குழுமத்தின் தலைவர் சிவராஜா துமிலன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சிவராஜா துமிலன்,
 
“சர்வதேச நாணய நிதியத்தின் திணிக்கப்பட்ட கொள்கைகளின் கீழ் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் புதிய ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் சில கொள்கைகளை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பது, கொள்ளை ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது. இதுவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது.

மத்திய வங்கியின் காலாவதியான அனைத்து கொள்கைகளும் மாற்றப்பட வேண்டும். விதிமுறைகள் தளர்த்தப்படும் போது திறந்த சந்தை உருவாகும். இதனூடாக பல்வேறு முதலீடுகளை ஈர்த்துக் கொள்ள முடியும்.

வடக்கு, கிழக்கில் மூலதனம் இல்லாத காரணத்தினால் வளங்கள் பயன்படுத்தப்படாமல் அவ்வாறே இருக்கின்றன.பல்வேறு நிலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறன. தற்பொழுது வடக்கில் புலம்பெயர் தமிழர்களினால் முதலீடுகள் அதிகரித்துள்ளன. வடக்கு, கிழக்குப் பகுதிகள் முதலீட்டின் முக்கிய ஸ்தலமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

தனிநபர் வருமான வரி சுமார் 200,000 இலட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக எமது நாட்டில் குறைந்தளவு விலையில் செய்யக்கூடிய சத்திர சிகிச்சைகளை, வெளிநாடுகளுக்குச் சென்று கூடிய விலையில் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறான கொள்கைகள் அனுபவமற்ற நபர்களினால் எடுக்கப்பட்டது. ஆனால் இம்முறை உயர் பட்டப்படிப்பு முடித்த நபர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் திறமையான முடிவு. இவ்வாறு அனுபவமும், திறமையும் கொண்ட நபர்கள் அமைச்சுக்கு நியமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply