கடவுச்சீட்டு பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வு

கடவுச்சீட்டு பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வு

புதிய கடவுச்சீட்டுகள் அடுத்த வாரம் முதல் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள நிலையில், கடவுச்சீட்டுகளின் கையிருப்பு எதிர்வரும் 19ம் திகதி கிடைக்கப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், கடவுச்சீட்டு நெருக்கடியைத் தீர்க்க அரசாங்கம் விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்:

“நாம் அனைவரும் அறிந்தது போல, புதிய விநியோகத்தர் ஒருவரிடமிருந்து 750,000 கடவுச்சீட்டுகளை புதிய இ-கடவுச்சீட்டு முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திற்குக் கடந்த அமைச்சரவை அனுமதியளித்தது. இருப்பினும், அதே நிறுவனத்திடம் இருந்து சாதாரண கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்குக் கடந்த அமைச்சரவை தீர்மானித்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 750,000 கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது” என அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கடவுச்சீட்டுக்களை அச்சிடும் நிறுவனம் குறிப்பிட்ட விலைக்கு அச்சிடும் பணிகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் இணங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பெறப்படவுள்ள 750,000 புதிய கடவுச்சீட்டுக்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது எனவும், அதன் பின்னர் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கான செயற்பாடுகளை அரசாங்கத்தால் முன்னெடுக்க இயலாது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜித ஹேரத், நீதிமன்ற வழக்கு நிறைவடைந்த பின்னரே இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply