இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் , இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றியினை பெற்றுக்கொண்டது.
சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டியில் இந்தியா அணியின் சுழற்சிக்குள் நியூசிலாந்து அணி சிக்கி கொண்டது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்த போதும் அந்த சாதனை வீணாகிப்போனது. இந்தியா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றமையினாலும், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் இந்தியா அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறி விக்கெட்களையும் இழந்தனர்,
நான்காவது நாளான இன்று காலை போட்டி ஆரம்பித்து குறுகிய நேரத்துக்குள்ளேயே போட்டி நிறைவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது. இதில் மயங்க் அகர்வால் 150 ஓட்டங்களையும், அக்ஷர் பட்டேல் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
அஜாஸ் பட்டேல் 119 ஓட்டங்களை வழங்கி 10 விக்கெட்களை கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 62 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் கைல் ஜமிசன் 17 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 7 விக்கெட்களை இழந்து 276 ஓட்டங்களை பெற்றது. இதில் மயங்க் அகர்வால் 62 ஓட்டங்களையும், புஜாரா, சுப்மான் கில் ஆகியோர் தலா 41 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்களையும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
540 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றது. இதில் டரில் மிட்செல் 60 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
போட்டியின் நாயகனாக மயங்க் அகர்வால் தெரிவான அதேவேளை, ரவிச்சந்திரன் அஷ்வின் போட்டி தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தியா அணி தொடரை 1-0 என வெற்றி பெற்றுள்ளது.
