காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (05.11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபைக்குக் கீழுள்ள இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல் மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கு மாதாந்தம் சுமார் 2.5 முதல் 3.0 மில்லியன் ரூபா வரை செலவாகிறது.
எனவே 2023ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைப் போன்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக செல்வதற்கும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், அந்தத் தொகையை ஈடுகட்டுவதற்கும் சிறந்த வாய்ப்பாக இது அமையும்.
விழாக்கள், இசைக் கச்சேரிகள் மற்றும் மக்கள் சுதந்திரமாகப் பங்கேற்க அனுமதிக்கும் பிற கொண்டாட்டங்களுக்குப் பொருத்தமான அளவுகோல்களுக்கு உட்பட்டு காலி முகத்திடல் மைதானத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தூய்மையான மற்றும் பசுமையான காலி முகத்திடல்” என்ற கருத்தின் அடிப்படையில் காலி முகத்திடலின் நிர்வாகத்தை மிகவும் ஒழுங்காகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.