பல வருடங்களாக நடைபாதைகளில் வியாபாரம் செய்து வந்த நிலையில் பண்டிகை காலங்களில் தமது கடைகள் அப்புறப்படுதப்பட்ட வெளிமாவட்டக்காரர்களுக்கு கடைகளை வழங்குவதாக மன்னார் நகர நடைபாதைக் கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் நகரில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு முன்பாக நேற்று பிற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான செயல்கள் காரணமாக 15 நாட்களுக்கு தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள்
கவலை வெளியிட்டுள்ளனர்.
15 வருடங்களுக்கு மேலாக இங்கு வியாபாரத்தினை மேற்கொண்டு வருவதாகவும் பண்டிகைக் காலங்களில் மாத்திரம் இந்த
வியாபார இடத்தை விட்டுத் தருமாறு நகர சபையினரால் கோரப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தம்மை அந்த பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அனுமதி மறுக்கப்பட்டதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நகரசபை செயலாளர் லோகேஸ்வரம் தெரிவித்திருப்பதாவது,
பண்டிகை கால நடைபாதை வியாபாரமானது கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையிலேயே மன்னார் நகர சபையானது பிரதான வருமானம் பெற்று வருகிறது.
இவ் வருமானத்தைக் கொண்டு மக்களுக்கான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில். நவம்பர் மாதம் 26 ஆம் திகதி தினமின சிங்கள பத்திரிகையிலும் தினகரன் தமிழ் பத்திரிகையிலும்
விளம்பரப்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் கேள்வி விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவை பெறப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கான
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு குறித்த நிலங்கள் மன்னார் நகர சபையினால், பன்னிரண்டு நாட்கள் வியாபாரத்துக்காக
வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை.குறித்த நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த நாளாந்த வியாபாரிகளிடம் நத்தார் பண்டிகை காலங்களில்
அந்த இடங்களை விட்டு தரவேண்டும் என்ற நிபந்தனையோடு நகர சபை, வாய்மூலமான அனுமதியை வழங்கி இருந்தது.
அவர்களும் அதற்கு இணங்கிய நிலையில் வியாபாரத்தினை மேற்கொண்டு இருந்தார்கள்.
நத்தார் பண்டிகை காலங்களில் மன்னார் நகர சபையால் பகிரங்க கேள்வி கூறப்படும் போது
அந்த இடங்களை விட்டு தர வேண்டும் என்ற அடிப்படையில் நாளாந்த நடைபாதை கடை வியாபாரிகளுக்கு அந்த இடம்
கொடுக்கப்பட்டிருந்தது. வியாபாரிகளும் அதற்கு இணங்கி கடந்த 10 வருட காலமாக நத்தார் பண்டிகை காலத்தில்
அந்த இடத்தினை நகர சபைக்கு மீண்டும் வழங்கி ஒத்துழைப்பு நல்கி இருந்தனர்.
இதன் அடிப்படையில் 30 நடைபாதை கடை வியாபாரிகள் வழமை போலவே பண்டிகை காலத்தில் அந்த இடத்தில் இருந்து
விலகி ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
குறித்த பதினொரு வியாபாரிகள் மாத்திரமே அந்த இடத்தை விட்டு விலக முடியாது என்றும் அந்த
இடம் தங்களுக்கு வேண்டும் எனவும் முரண்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயத்தை நாங்கள் பொலிசாரிடம் தெரிவித்து உரிய நடைமுறை மூலம்
பொலிசாரின் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்பே தாமாக விலகிக் கொண்டனர்.
இது குறித்து மன்னார் அரசாங்க அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர்
பண்டிகை காலங்களில் இவர்களுக்கான வியாபார இடத்தினை மன்னார் ரெலிகொம் அமைந்துள்ள
பகுதியில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதனையும் மீறி அவர்கள் இவ்வாறு முரண்படுகின்றனர்.
பண்டிகை காலங்களில் மட்டுமே நடைபாதைக் கடைகளில் வியாபாரம் செய்ய முடியும் என்பது.
உள்ளூராட்சி சபைகளின் சட்ட ஏற்பாடாகும்.
ஏனைய தினங்களில் எவரும் நடைபாதை கடைகளில் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
இருப்பினும் இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தினை கருத்திற் கொண்டு அந்த இடம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் எவரும் தொடர்ச்சியாக அந்த இடங்களில் வியாபாரத்தில் ஈடுபடுவது இல்லை.
மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள பண்டிகை காலங்களில் கடைகளை பெற்றுக் கொள்வதன் நிமித்தம்
கடந்த ஒரு மாதமாக அவர்கள் தொடர்ச்சியாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது சட்டத்துக்கு புறம்பான ஒரு காரியம் குறித்த நிலங்கள் இவர்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில்
இது ஒரு ஊழலான செயற்பாடாகக் கருதப்படும் என்று தெரிவித்தார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்