கனிய மணல் அகழ்வு சர்ச்சை – அமைச்சரின் முடிவு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம்
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில், மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கனிய மணல் உட்பட சுற்றாடலைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு நடவடிக்கை முன்னெடுப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறித்த கூட்டத்தில், மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளினால் கனிய மணல் அகழ்வை முற்றாக நிறுத்துவதற்கான நடவடிக்கையை மன்னார் மாவட்ட அதிகாரிகள் தரப்பினர் மிகக் காத்திரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், எதிர்வரும் மே மாதம் வரை கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாகவும், அமைச்சர் மன்னாருக்கு வருகை தந்து கனிய மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எதிர்காலத்தில் முன்னெடுப்பதாகத் தெரிவித்திருந்தாகவும் கூறினார்.

இதற்கமைய, மண்ணகழ்வு தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் மே மாதம் வரை முன்னெடுக்க முடியாது என்று அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் புவிச் சரிதவியல் திணைகள் அதிகாரிகள்,பொறியியலாளர்கள்,பிற திணைகள் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply