வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலும் பொதுச்சந்தையினை அண்மித்தும் அமைந்திருந்த வீதியோர மரக்கறி வியாபாரங்கள் மற்றும் ஏனைய வீதியோர தற்காலிக நிலையங்கள் நேற்று(03.07) அகற்றப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அண்மைக்காலமாக மக்களின் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்ததுடன், அப்பகுதிகளில் தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையினை கருத்திற்கொண்டும், குறித்த வியாபாரிகளால் பொது மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கழிவு நீர் வடிகாலமைப்பிற்கு அருகில் மரக்கறி வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தமையினை கருத்திற்கொண்டும் வவுனியா மாநகரசபை இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பில், பொது மக்களிடமிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் மனக்கசபைக்கு மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதற்கமைவாக அண்மையில் பதவியேற்ற புதிய மாநகரசபை நிர்வாகம் கடந்த வாரம் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைளை நிறுத்துமாறும், தற்காலிக கொட்டகைகளை அகற்றுமாறும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. அதன்படி கொட்டகைகளும், வீதியோர வியாபாரங்கள் வவுனியா மாநகர சபையின் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபனின் பணிப்புரைக்கமைவாக, அகற்றப்பட்டது என வவுனியா மாநகரசபை தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் மக்களின் பொதுப்போக்குவரத்து மற்றும் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலினை விளைவிக்கும் வகையில் செயற்படும் அனைத்து வீதியோர வியாபாரங்கள் தொடர்பில் மாநகர சபையினரால் தொடர் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், குறித்த வியாபாரங்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளை சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும், இவ் நடவடிக்கைகள் தொடர்ச்சியான முறையில் மக்களின் கோரிக்கைக்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வவுனியா மாநகரசபை அறிவித்துள்ளது.