பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வ்தேசப் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்ட பர்வேஸ் ஹொசைன் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தௌஹித் ரிதோய் 51 ஓட்டங்கள். ஜேக்கர் அலி 24 ஓட்டங்களையும், ஷமீம் ஹொசைன் 22 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக ஓட்டங்கள் பெறப்பட்டன. ரன்சிம் ஹசன் அதிரடியாக துடுப்பாடி 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவரின் துடுப்பாட்டம் மூலம் போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பங்களாதேஷ் பெற்றுக் கொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கையே பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கும் கைகொடுத்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ விக்கெட்களை கைப்பற்றினார். வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்களையும், டுஸ்மாந்த சமீர, சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

249 என்ற ஓட்ட இலக்கை இந்த மைதானத்தில் இரண்டாவதாக துடுப்பாடி பெறுவது இலகுவானதல்ல. ஆனால் நிதானமாக போராடி பெற வேண்டும் என்ற நிலையில் துடுப்பாட்டத்தை ஆர்மபித்த இலங்கை தொடர்ச்சியாக ஆரம்பம் முதல் விக்கெட்ளை இழந்தது. இதன் காரணமாக தோல்வியடையும் நிலை உருவானது. இறுதியில் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பத்தும் நிஸ்ஸங்க 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க களமிறங்கிய குஷல் மென்டிஸ் அதிரடி நிகழ்த்தி 31 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அவருக்கு முன்னதாக நிஷான் மதுஷ்க 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருவரும் 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அதன் பின்னர் இலங்கை அணிக்கு நல்ல இணைப்பாட்டங்கள் அமையவில்லை.

கமிந்து மென்டிஸ் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஜனித் லியனகே 78 ஓட்டங்களை பெற்றார். இறுதி வரையில் தனித்து நின்று போராடி இந்த ஓட்ட எண்ணிக்கையை ஜனித் பெற்றுக் கொடுத்தார். டுஸ்மாந்த சமீர அவருக்கு நல்ல இணைப்பாட்டம் ஒன்றை வழங்கினார். இருவரும் 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இருவரும் துடுப்பாடிய விதம் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தன்வீர் இஸ்லாம் 5 விக்கெட்ளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சே இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. பங்களாதேஷ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக துடுப்பாடாமல் அடித்தாட முற்பட்டமை மற்றும் விக்கெட்கள் வீழ்த்தப்பட ஓட்டங்களை ஓடி பெற தவறியமை முக்கியமான காரணமாக அமைந்தது.

மூன்று போட்டிகளடங்கிய தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் தொடர் சமநிலையில் காணப்படுகிறது. மூன்றாவதும் இறுதியுமான போட்டி கண்டி பல்லேகல கிரிக்கட் மைதானத்தில் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply