பாடசாலை விளையாட்டிற்கு பாரிய முதலீடு – வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் அங்கீகாரம்!

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதற்காக 450 மில்லியன் ரூபா மதிப்பிலான திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் இன்று (08.05) விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தில் இதன் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றதுடன், பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

விளையாட்டு மைதானங்கள் மற்றும் உபகரணங்களுக்கு முழுமையான நிதி இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபாயில், பாடசாலை விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கும் நிதி பயன்படுத்தப்படும். இதன் முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் இன்று விநியோகிக்கப்பட்டன. அடையாள ரீதியாக மூன்று பாடசாலைகளுக்கான உபகரணங்களை அமைச்சர் வழங்கி வைத்தார். இந்த உபகரணத் தொகுதிகளில் கிரிக்கெட், ரக்பி, வலைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்கான உபகரணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் சுனில் குமார கமகே இங்கு உரையாற்றுகையில், “விளையாட்டு என்பது இனி வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துகிறோம். திறமையான வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

வொலிபோல் அணி விவகாரத்தில் விளையாட்டு அதிகாரிகளின் தவறா?
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் அவர்கள், அண்மையில் வொலிபோல் அணியொன்றுக்கு வௌிநாடு செல்ல முடியாமல் போனமை தொடர்பில் விளக்கமளித்தார். இந்த தாமதத்திற்கு விளையாட்டுத் திணைக்களமோ அல்லது அமைச்சோ பொறுப்பல்ல என அவர் தெளிவுபடுத்தினார்.

மே 8ஆம் திகதி வௌிநாடு செல்ல வேண்டிய அணியின் பெயர்ப்பட்டியல் ஏப்ரல் 29ஆம் திகதியே தெரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 30ஆம் திகதியே திணைக்களத்திற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளன. 21 நாட்களுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் கடைசி வாரத்தில் வழங்கப்பட்டதால் வீரர்களும் பெற்றோர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வொலிபோல் சம்மேளனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply