தமிழகத்தில் புதிய அரசு அமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. நடிகரும் தமிழக வெற்றி கழக (TVK) தலைவருமான விஜய் இன்று (08.05) மாலை 6 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது சந்திப்பாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அரசு அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவை தற்போது விஜய் பெற்றுள்ளதாக அரசியல் இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தலா 2 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 118 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை அவர் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக புதன்கிழமையும் வியாழக்கிழமையும் ஆளுநரை சந்தித்த விஜயின் கோரிக்கையை, சட்டமன்றத்தில் போதுமான ஆதரவு இல்லை என்ற காரணத்தால் ஆளுநர் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில், விஜயை ஆட்சியிலிருந்து தடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) ஆகிய இரு முக்கிய எதிர்க்கட்சிகளும் 50 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.