‘யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்’

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (16/12) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே சீன தூதரகமானது யாழ்ப்பாண மக்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கிறது.

இந்த உதவி வழங்கும் நிகழ்வானது சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் என நாங்கள் கருதுகின்றோம். குறிப்பாக சீன தூதரகமானது இலங்கைக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளது. அதேபோல வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொடுப்பதில் சீனா பெரும் பங்காற்றியுள்ளது

அதேபோல் நேற்று வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்குமென ஐந்து நீர் சுத்திகரிக்கும் இயந்திரப் பொறிமுறையினையும், வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளோம். 5 மடிக்கணணிகள் மற்றும் ஒரு தொகுதி புத்தகத்தையும் பொது நூலகத்திற்கு வழங்கியுள்ளோம். அந்தவகையில், எதிர்காலத்தில் சீன தூதரகம் யாழ்ப்பாண மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கும்’ என்றார்.

இதேவேளை நேற்றைய தினம் (15/12) யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயத்தை இந்து சமய ஆசாரப்படி தரிசித்ததுடன், அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.

(யாழ் நிருபர்)

'யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்'
'யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்'
'யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்'
'யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்'
'யாழுக்கு தொடர்ந்தும் சீனா உதவும்'

Social Share

Leave a Reply