‘மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும்’

மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (29/12) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, யாழ்ப்பாண நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தினை பயன்படுத்துவது தொடர்பான இழுபறி நிலைக்கு விரைவில் இறுதித் தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்ததுடன், மக்களுக்கு பாதிப்புக்கள் அற்ற நிறைவான போக்குவத்து சேவை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கு அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர் மத்தியில் புரிந்துணர்வுடனான சேவை ஏற்படுத்துவதே கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தின்போது, யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளை இணைந்த நேர அட்டவணையில் மேற்கொள்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தினை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுத்தவது உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், குறித்த விடயங்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர்களுடன் கலந்துரையாடி விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

'மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும்'

Social Share

Leave a Reply