சர்ச்சைக்குரிய உர விவகாரம் – சீவிங் நிறுவனத்தின் அதிரடி முடிவு

சர்ச்சைக்குரிய உர விவகாரம் தொடர்பாக சீவிங் என்ற சீன நிறுவனம் இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வரும் வேளையில் கடுமையான தடைகளை விதிக்கவும் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிலிருந்து இறக்குமதிக்கு தயாரான குறித்த உரம், தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களை கொண்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டு இலங்கையில் நிராகரிக்கப்பட்டது.

இலங்கையின் குறித்த முடிவை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம் இழப்பீடு கோரியிருந்த நிலையில், அதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கும் தாமதப்படுத்தப்பட்டு வந்ததற்கு அமைய, இலங்கைக்கு எதிரான தனது தீவிர முயற்சியில் சீவிங் நிறுவனம் இறங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, சீவிங் பயோடெக் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து, இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சீன அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஷான்டாங் மாகாண அரசாங்கத்தை அணுகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையை நம்ப வேண்டாம் என ஏனைய சீன நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சீவிங் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் இருந்து கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, எந்தவொரு சீன உற்பத்திகளையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு முன்னர் சீன நிறுவனங்களுக்கு மேம்பட்ட கொடுப்பனவுகளை வழங்குமாறு சீன அரசாங்கத்திடம் அறிவுறுத்தியுள்ளதாக குறித்த நிறுவன உயர்மட்ட அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

மேலும், உர விவகாரம் தொடர்பில், சர்வதேச நிறுவனங்களுக்கும் புகார் அளிக்கப்படும் என்றும் இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக சீவிங் பயோடெக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக குறித்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய உர விவகாரம் - சீவிங் நிறுவனத்தின் அதிரடி முடிவு

Social Share

Leave a Reply