இலங்கை வானொலியான சூரியன் வானொலியின் இரு பெரும் முக்கியஸ்தர்கள் இன்றுடன் (31/12) உத்தியோகப்பூர்வமாக பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை வானொலித்துறையில் நீண்டகால சாதனையாளரும் முன்னணி அறிவிப்பாளருமான சூரியன் வானொலியின் நிகழ்ச்சி பணிப்பாளர் லோஷன் என அறியப்படும் வாமலோஷணன் மற்றும் சூரியன் வானொலியின் திட்டமிடல் பிரிவில் மிக நீண்டகாலம் பணிபுரிந்த அஜித்தும் இன்றுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
லோஷன் என அறியப்படும் வாமலோஷணன், இலங்கை வானொலித்துறையின் சாதனையாளர் என்பதுடன் பல தேசிய விருதுகளையும் தனது குரல் வளத்தால் வென்று, ஏராளமான இரசிகர்களையும் தம்வசப்படுத்திய பெருமைக்குரியவராவார்.
இவர் மிக பிரபலமான அறிவிப்பாளர் என்பதுடன், காலைநேர சூரியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார். 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதிகளிலும் 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளிலும் இவர் முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அவரை தொடர்ந்து வானொலித்துறையில், சூரியனில் நீண்டகால சேவையாற்றிய அஜித், 2002ஆம் ஆண்டு தொடக்கம் சூரியனுக்காக அளப்பரிய சேவைகளை வழங்கியதோடு, சூரியனின் வெளிக்கள நிகழ்ச்சிகளில் பெயர் பெற்ற ஒருவராகவும் சிங்கள மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றவராகவும் திகழ்ந்தார்.
அந்தவகையில் வானொலித்துறையின் காந்த குரல், மக்கள் நாயகன் லோஷன் மற்றும் சூரியனின் சிறந்த சேவையாளர் அஜித் ஆகிய இரு பெரும் ஊடகத்துறை தூண்களும் இன்று உத்தியோகப்பூர்வமாக தமது பதவி விலகலை அறிவித்துள்ளனர்.