காத்தாடி திருவிழாவில் தமிழர் பாரம்பரியத்தை அழிக்க முயற்சி

இவ்வாண்டுக்கான யாழ்ப்பாணக் காத்தாடி திருவிழாவுக்கு அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமைக்காக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியும், வெளிநாடுகளில் இயங்கும் சில தமிழ் அமைப்புக்களும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காத்தாடி திருவிழா இம்மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அதனை சர்வதேச நிகழ்வாக விஸ்தரிக்க ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

அந்தவகையில், குறித்த இந்நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட அதேவேளை, வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான யாழ்ப்பாணக் காத்தாடி திருவிழாவிற்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அழைக்கும் இந்த நடவடிக்கையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, அதுதொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், தமிழீழ விரோத சக்திகளின் பங்கேற்புடனும் தலைமைத்துவத்துடனும் நிகழ்வை நடாத்தும் நடவடிக்கையில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது கண்டிக்கப்பட வேண்டியது.

வல்வெட்டித்துறையில் இந்த காத்தாடி திருவிழா நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது. ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக தமிழர் விரோத சக்திகளின் பங்களிப்புடனும் தலைமைத்துவத்துடனும் நிகழ்வை நடாத்தும் நடவடிக்கையில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமிழர் பாரம்பரியத்தை அழிக்க முயல்கின்றனர்.

தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முற்றாகப் புறக்கணித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கோரி இன்றும் வீதியில் இறங்கி வருகின்றனர். தமிழ் தாயகத்தில் படிப்படியாக சிங்களமயமாக்கல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தமிழர்களின் காணிகள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படும் நிலையில், அரசாங்கப் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அழைப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது’ என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காத்தாடி திருவிழாவில் தமிழர் பாரம்பரியத்தை அழிக்க முயற்சி

Social Share

Leave a Reply